Thursday, April 1, 2010

இட்லி

பூப்போன்ற இட்லி

புளுங்கல் அரிசி 800 கிராம் (4 கப்)
உளுந்து 200 கிராம் (1 கப்)
உப்பு தேவைக்கேற்ப

அரிசியையும் உளுந்தையும் நன்கு கழுவி தனி தனியாக
குறைந்தது 2 மணி நேரம் ஊறவைத்து,முதலில் உளுந்தை
சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு மசிய அரைத்து எடுத்துக்
கொண்டு பிறகு அரிசியை உப்பு சேர்த்து சிறிது கொரகொரப்பாக
அரைத்து உளுந்துமாவுடன் சேர்த்து ரொம்ப தண்ணியாகவும்
இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் சரியான பக்குவத்தில்
கரைத்து 6 ல் இருந்து 8 மணி நேரம் புளிக்க வைத்து
பிறகு இட்லி அவிக்கலாம்.

குறிப்புகள்:

நல்ல உளுந்தாக இருந்தால் 4 கப் அரிசிக்கு ¾ கப் சேர்த்தால் போதும்.

அரிசி பருப்பை முதல் நாள் இரவு முழுதும் ஊற வைத்து
காலையில் அரைக்கலாம்.

அரிசி, பருப்பை ஊறவைக்கும் போது நன்கு கழுவி விடுவதால்
அரைப்பதற்கு முன் லேசாக அலசினால் போதுமானது.அதிகமாக
கழுவும்போது மாவு பொங்கி(புளித்து)வருவது தடுக்கப்படுவதோடு
சத்துக்களும் போய்விடும்.

இரண்டு மேஜைக்கரண்டி வெந்தயத்தை எண்ணை விடாமல்
லேசாக வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கி
வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது இட்லிமாவில்
சிறிது வெந்தயப்பொடியை கலந்து தோசை சுடலாம் ருசியுடன்
வாசனையாகவும் இருக்கும்.

பொதுவாக இட்லி வேகும் நேரம் குக்கர் தட்டாயிருந்தாலும்,
ஏழு குழி,ஐந்து குழி,அல்லது இரண்டடுக்கு தட்டாயிருந்தாலும்
ஏழு நிமிடம் போதுமானது நன்கு அவிந்து விடும்.

அதிக நேரம் அவிக்கப்படும்போது இட்லியின் நிறம் மாறக்கூடும்.

-மீனா

No comments:

Post a Comment