Thursday, April 8, 2010

கந்தரப்பம்

தேவையானவை:

500 கிராம் பச்சரிசி (2 ½ கப்)
100 கிராம் உளுத்தம் பருப்பு (½ கப்)
400 கிராம் வெல்லம் (2 கப்)
தேங்காய் பூ 2 மேஜைக்கரண்டி
1 தேக்கரண்டி வெந்தயம்
ஏலக்காய் 10.

அரிசி,உளுந்தம் பருப்பு,வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற வைத்து பிறகு தண்ணீர் சிறிதளவு ஊற்றி அரைக்க வேண்டும். .பாதி அரைத்ததும் தட்டி வைத்துள்ள வெல்லத்தை அத்துடன் சேர்த்து நன்கு மிருதுவாக அரைபட்ட பின் அத்துடன் தேங்காய்பூ சேர்த்து மேலும் 2-3 நிமிடங்கள் அரைத்து பின் அரைத்த மாவை பாத்திரத்தில் எடுத்து அத்துடன் ஏலக்காயை பொடி செய்து மாவில் போட்டு நன்கு கலந்து, அடியில் தட்டையான(flat bottom) வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள மாவை வட்டமான கரண்டியில் எடுத்து எண்ணைக்குள் ஊற்றி அப்பம் மேலெழும்பி வந்ததும்,அதை திருப்பி விட்டு வெந்ததும் எடுக்கவும்.

குறிப்புகள்

1)அரிசி பருப்பு முப்பது அல்லது நாற்பது நிமிடங்கள் ஊறினால் போதுமானது.

(2 வெல்லத்தை முன் கூட்டியே தட்டி பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.)

3)மாவு அரைக்கும்போது தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி அரைக்க வேண்டும் தண்ணீர் கூடி விட்டால் வெல்லம் போட்டதும் இன்னும் அதிகம் இளகி மாவு தண்ணியாகி விடும்.

4)எண்ணை அதிகம் சூடாக இருந்தால் பணியாரம்(அப்பம்)சீக்கிரம் வெந்து உள்ளே வேகாமல் மாவாக இருக்கும்.அதே சமயம் சூடு குறைந்தாலும் எண்ணையை குடித்து விடும் ஆதலால் சரியான அளவில் நெருப்பை குறைத்து வைத்து பணியாரம் சுடவேண்டும். இது எல்லாவித எண்ணை பலகாரத்திற்கும் பொருந்தும்.

5) மாவை அரைத்தவுடனும் கந்தரப்பம் சுடலாம்.சிறிது புளிக்க வைத்தும் சுடலாம்(ருசி குழிப்பணியாரம் போல் இருக்கும்).

6) தேங்காய்ப்பூவை (சேர்த்து)அரைக்காமல் மாவில் நேரடியாக போட்டு கலந்தும் சுடலாம்.

7) அதிக இனிப்பு விரும்பாதவர்கள் வெல்ல அளவை குறைத்து கொள்ளலாம்.

மீனா.

No comments:

Post a Comment