Tuesday, April 20, 2010

சைவ நாசிலெமாக்

 
                              (இது அசைவம்!)

தேவையனவை:

பச்சரிசி 1 கப்(200கிராம்)
தேங்காய் 1 மூடி
உப்பு தேவைக்கேற்ப
உருளைகிழங்கு 2 (சிறியதாக)
நிலக்கடலை 50 கிராம்
எண்ணை ½ கப் (பொரிப்பதற்கு)
லவங்கம் ½ பூ
பண்டான் 2 இலை
எலுமிச்சம்பழம் ½ மூடி
இஞ்சி துண்டு ¼ இஞ்ச்
வெள்ளரிக்காய் 1
சைவ நெத்திலி 200 கிராம்}
அல்லது வாழைப்பூ 1
(மேலாக உள்ள மூன்று அடுக்கு)
பெரிய வெங்காயம் 1
தனி மிளகாய்த்தூள் 1½ தேக்கரண்டி
புளி நெல்லிக்காய் அளவு


செய்முறை:

தேங்காயைத் துருவி (2¼ கப் தண்ணீர் விட்டு பால்
எடுக்க வேண்டும். அரிசியை கழுவி தேங்காய்ப்பாலை
அத்துடன் சேர்த்து,இஞ்சி அரைத்தது, பண்டான் இலை,
லவங்க பூ, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பில்
(பிரஷர் குக்கரானால் 12 நிமிடம்) வைத்து கொதி
வந்ததும் அடுப்பை நன்கு குறைத்து இளம் சூட்டில்
வேக வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

கடலையை எண்ணையில் வறுத்து எடுத்துக்கொண்டு,
வாழைப் பூவையும்(உள்ளிருக்கும் நரம்பை நீக்கி)
எண்ணையில் பொரித்து எடுத்து சிறிய உருளைக்
கிழங்கை சிறிது உப்பு சேர்த்து அவித்து தோலை
உரித்து இரண்டாக வெட்டி வைத்து கொண்டு,
வெள்ளரிக்காயை தோல் சீவி கழுவி அதன் மேல்
பாகத்தின் முழுதும் நீட்டவாக்கில் முள் கரண்டியால்
கீறிவிட்டு பிறகு வட்டமாக மெலிதாக வெட்டி
வைத்துக்கொள்ள வேண்டும்.

சம்பல் செய்முறை :

அடுப்பில் தட்டையான ஒரு பாத்திரத்தை வைத்து
சிறிது எண்ணை விட்டு அதில் பொரித்த வாழைப்பூ,
வெட்டி வைத்துள்ள வெங்காயம், சேர்த்து 1 நிமிடம்
கிளறி பின் அதனுடன் மிளகாய்த்தூள் சேர்த்து புளியை
1/4கப் தண்ணீரீல் கரைத்து தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து
மூடி சிறிது நேரம் வேகவிட்டு எண்ணை மிதந்ததும்
இறக்கி வைத்துக்கொள்ள வெண்டும்.

ஏற்கனவே சமைத்துவைத்துள்ள சாதத்தை(தேங்காய்
மூடிபோன்ற) குழியான சின்ன கிண்ணத்தில் எடுத்து
கரண்டியால் சம மாக அமுக்கி சாப்பாடு பரிமாறும்
தட்டின் நடுவில் குப்புறகொட்டினால் அழகாக விழும்.
அதை சுற்றிலும் உருளைகிழங்கு,பொரித்த கடலையில்
பாதி,வட்டமாக வெட்டிவைத்திருக்கும் வெள்ளரிக்காய்
ஐந்து, காளான்சம்பல் ஒரு கரண்டி, எலுமிச்சை
எல்லாவற்றையும் வைத்து பரிமாறவேண்டும்.

சாப்பிடும் போது எலுமிச்சையை பிழிந்து விட்டு
மற்ற எல்லாவற்றிலும் கொஞ்சம்கொஞ்சம் எடுத்து
சாதத்துடன் சேர்த்து சாப்பிடவேண்டும்.

 குறிப்பு:

பண்டான் என்பது ஒரு இலை அது மலேசியாவில்
கிடைக்கும். மற்ற நாட்டில் கிடைக்குமா என்பது
தெரியவில்லை பண்டான் இலை இல்லையென்றால்
பதிலுக்கு கொத்தமல்லி உபயோகிக்கலாம்.அதே
போல் மலேசியாவில் சைவ நெத்திலி(அயிரை)
மீன் கிடைக்கும். சைவ நெத்திலியோ,வாழைப்
பூவோ கிடைக்கவில்லையென்றால் பதிலுக்கு
காளானை எண்ணையில் பொரித்தும் உபயோகிக்
கலாம்.அல்லது கொத்தவரங்காயை இரண்டு
பக்கமும் நுனியில் வெட்டி முழுதாக சிறிது
உப்பு போட்டுபிசறி எண்ணையில் வறுத்து
சாதத்துடன் சாப்பிடலாம். அதையே சம்பலும்
செய்யலாம்.கொத்தவரங்காய் நல்ல பிஞ்சாக
இருக்க வேண்டும்.

எலுமிச்சை பிடிக்காதவர்கள் அது இல்லாமலேயே
சாப்பிடலாம்.

சம்பல் செய்யும்போது எண்ணை கொஞ்சம் அதிகம்
இருந்தால்த்தான் நாசிலெமாக் சுவையாக இருக்கும்.

முட்டை மட்டும் சாப்பிடுபவர்கள்.உருளை
கிழங்குக்கு பதில் முட்டையை சேர்த்துக்
கொள்ளலாம்.

-மீனா

Thursday, April 8, 2010

கூட்டு

காய்கள்: முட்டைக்கோஸ், செளசெள என்னும் பங்களூர் கத்திரிக்காய், அவரைக்காய், புடலங்காய், கத்திரிக்காய், கொத்தவரைக்காய், பீன்ஸ், வெள்ளைப் பூசணிக்காய், பறங்கிக்காய்.

பருப்புச் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ செய்யலாம். ஆனால் பருப்புச் சேர்க்காமல் கொத்தவரை, பீன்ஸ், அவரையில் மட்டும் நன்றாயிருக்கும். முதலில் அவை.

மேலே சொன்ன மூன்று காய்களில் ஏதேனும் ஒன்று கால் கிலோ. கடலைப்பருப்பு ஒரு தேக்கரண்டி. மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, உப்பு தேவையான அளவு, பெருங்காயம் கட்டி அல்லது தூள், தேங்காய்(விருப்பமிருந்தால்) அரிசி மாவு ஒரு தேக்கரண்டி. கருகப்பிலை, கொத்துமல்லி, தாளிக்க ஒரு தேக்கரண்டி எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, ஒரு மி.வத்தல்.

கடலைப்பருப்பைச் சிறிது நேரம் ஊற வைத்துவிட்டு, ஒரு கடாய் அல்லது காப்பர் பாட்டம் பாத்திரத்தில் அல்லது உருளியில் போட்டு நீர் சேர்த்து வேக வைக்கவும். நறுக்கி வைத்த காயை, ஒரு முட்டை நல்லெண்ணெய் விட்டு சிறிது நேரம் வதக்கிவிட்டுப்(நிறம் மாறாமல் இருக்கும்) பின்னர் கடலைப்பருப்போடு சேர்த்து வேகவைக்கவேண்டும். அரை வேக்காட்டில் மஞ்சள் பொடி, பெருங்காயம் கட்டியானால், (தூள் என்றால் தாளிக்கும்போது போடலாம்.), சாம்பார் தூள் சேர்க்கவும். வேகும்போது உப்புச் சேர்க்கவும். முன்னாலேயே உப்பைச் சேர்த்தால் சில சமயம் காய்கள் விறைப்புத் தன்மை அடையும். நன்கு வெந்து சேர்ந்து கொதிக்கும்போது, கொஞ்சம் தேங்காய்துருவலோடு அரிசி மாவைச் சேர்த்து அரைத்துக் கூட்டில் கொட்டிக் கலக்கவும். தேங்காய் சேர்க்கவில்லை எனில் ஒரு தேக்கரண்டி புழுங்கலரிசியை நன்கு வறுத்துக் கொண்டு மாவாக்கி அந்த மாவைப் போடலாம். வாசனையாகவும் இருக்கும். தேங்காய் சேர்க்காத குறையும் இருக்காது. சர்க்கரை நோயாளிகளுக்கு இப்படித் தான் செய்வது வழக்கம். கீழே இறக்கிக் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துப் பின் கருகப்பிலை, கொத்துமல்லி போடவும்.

இதே போல் முட்டைக்கோஸ், செளசெள போன்ற காய்களிலும் செய்யலாம் என்றாலும் அவற்றுக்குக் கட்டாயம் தேங்காய் வேண்டும். உப்புச் சேர்க்கும்போது ஒரு தக்காளியை நாலாய்க் கீறிப் போடலாம். இது சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆகவும் பயனாகும்.(பிடிக்கிறவங்களுக்கு)

பருப்புச் சேர்த்துச் செய்யும் விதம்.
இதற்குப் பயத்தம்பருப்புத் தான் நன்றாக இருக்கும். தேங்காய் கட்டாயம் தேவை. கால் கிலோ காய்கறி என்றால் சின்னதாய் ஒரு மூடித் தேங்காய் அல்லது இரண்டு மேஜைக்கரண்டி துருவல், மிளகாய் வற்றல் ஒன்று அல்லது இரண்டு, சீரகம், அரிசி மாவு. கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை, தாளிக்க எண்ணெய்.

பயத்தம்பருப்பு ஒரு மேஜைக்கரண்டி, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு. இரண்டையும் களைந்து ஊற வைத்து வேக வைக்கவும். பயத்தம்பருப்பு நன்கு குழைய ஆரம்பிக்கும்போது நறுக்கி வைத்த காய்கள் சேர்க்கவேண்டும். எல்லாக்காய்களும் சேர்த்தும் பண்ணலாம். அல்லது தனியாக முட்டைக்கோஸோ, செளசெளவோ, அவரைக்காயோ, புடலையோ பண்ணலாம். காய்களைச் சேர்த்ததும் மஞ்சள் பொடியும், உப்பும் மட்டும் போடவும். நன்கு வெந்து வந்ததும் மிளகாய் வற்றல், தேங்காய் துருவல், சீரகம், அரிசிமாவை ஒன்றாய் அரைத்துக் கூட்டில் கொட்டிக் கலக்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கிவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மி.வற்றல்(தேவையானால்) தாளித்துக் கருகப்பிலை போடவும். இதுவும் சாதத்தோடு சேர்த்துச் சாப்பிடவும், சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.

பொடி போட்டுச் செய்யும் முறை:

பயத்தம்பருப்பு வேக வைத்துக் கொண்டு, காய்களைப் போட்டுவிட்டு, மஞ்சள் தூள், சாம்பார்பொடி, உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். காய்கள் நன்கு வெந்ததும் தேங்காய் துருவலையும் அரிசி மாவையும் அரைத்துச் சேர்க்கவும். அல்லது மாவை மட்டும் கரைத்துவிட்டுத் தாளிக்கும் போது கடுகு, உளுத்தம்பருப்பு, வறுத்துக் கொண்டு அந்த எண்ணெயிலேயே கருகப்பிலையும், தேங்காயையும் வறுத்துச் சேர்க்கலாம்.

-கீதா

கந்தரப்பம்

தேவையானவை:

500 கிராம் பச்சரிசி (2 ½ கப்)
100 கிராம் உளுத்தம் பருப்பு (½ கப்)
400 கிராம் வெல்லம் (2 கப்)
தேங்காய் பூ 2 மேஜைக்கரண்டி
1 தேக்கரண்டி வெந்தயம்
ஏலக்காய் 10.

அரிசி,உளுந்தம் பருப்பு,வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற வைத்து பிறகு தண்ணீர் சிறிதளவு ஊற்றி அரைக்க வேண்டும். .பாதி அரைத்ததும் தட்டி வைத்துள்ள வெல்லத்தை அத்துடன் சேர்த்து நன்கு மிருதுவாக அரைபட்ட பின் அத்துடன் தேங்காய்பூ சேர்த்து மேலும் 2-3 நிமிடங்கள் அரைத்து பின் அரைத்த மாவை பாத்திரத்தில் எடுத்து அத்துடன் ஏலக்காயை பொடி செய்து மாவில் போட்டு நன்கு கலந்து, அடியில் தட்டையான(flat bottom) வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள மாவை வட்டமான கரண்டியில் எடுத்து எண்ணைக்குள் ஊற்றி அப்பம் மேலெழும்பி வந்ததும்,அதை திருப்பி விட்டு வெந்ததும் எடுக்கவும்.

குறிப்புகள்

1)அரிசி பருப்பு முப்பது அல்லது நாற்பது நிமிடங்கள் ஊறினால் போதுமானது.

(2 வெல்லத்தை முன் கூட்டியே தட்டி பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.)

3)மாவு அரைக்கும்போது தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி அரைக்க வேண்டும் தண்ணீர் கூடி விட்டால் வெல்லம் போட்டதும் இன்னும் அதிகம் இளகி மாவு தண்ணியாகி விடும்.

4)எண்ணை அதிகம் சூடாக இருந்தால் பணியாரம்(அப்பம்)சீக்கிரம் வெந்து உள்ளே வேகாமல் மாவாக இருக்கும்.அதே சமயம் சூடு குறைந்தாலும் எண்ணையை குடித்து விடும் ஆதலால் சரியான அளவில் நெருப்பை குறைத்து வைத்து பணியாரம் சுடவேண்டும். இது எல்லாவித எண்ணை பலகாரத்திற்கும் பொருந்தும்.

5) மாவை அரைத்தவுடனும் கந்தரப்பம் சுடலாம்.சிறிது புளிக்க வைத்தும் சுடலாம்(ருசி குழிப்பணியாரம் போல் இருக்கும்).

6) தேங்காய்ப்பூவை (சேர்த்து)அரைக்காமல் மாவில் நேரடியாக போட்டு கலந்தும் சுடலாம்.

7) அதிக இனிப்பு விரும்பாதவர்கள் வெல்ல அளவை குறைத்து கொள்ளலாம்.

மீனா.

Friday, April 2, 2010

சுலபமான ஆப்பம் செய்முறை

5 பேர்களுக்கானது)

தேவையானவை:

பச்சரிசி மாவு 3 கப்
தேங்காய்ப்பூ 1/2 மூடி
சாதம் 2 மேஜைக்கரண்டி
தேங்காய் தண்ணீர் 1 கப்
தயிர் 1/2 கப்
சோடா 1/4 தேக்கரண்டி
சீனி 2 மேஜைக்கரண்டி

செய்முறை:

சோடாவை தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்து
அரைத்து எடுத்து அப்படியே இரவு முழுதும் வைத்து,
அடுத்த நாள் ஆப்பம் சுடுவதற்கு அரைமணி நேரம்
முன் கால் தேக்கரண்டி சோடாவையும்,சிறிதளவு
சீனியும் அரைத்து வைத்திருக்கும் மாவில் கலந்து
ஆப்பச்சட்டியை அல்லது சிறிது குழியான இருப்பு
சட்டியை அடுப்பில் வைத்து சூடு வந்ததும் அடுப்பை
குறைத்து வைத்து எண்ணையில் நனைத்த வெள்ளைத்
துணியை கொண்டு சட்டியை துடைத்து (நான்ஸ்டிக்பேன்
என்றால் இது தேவை இல்லை) ஒரு கரண்டி மாவை
அதில் விட்டு உடன் சட்டியை கையில் எடுத்து(கை
சுட்டு விடாமல் துணி உபயோகியுங்கள்)மாவு சட்டியின்
எல்லா பக்கமும் வருகிறார்ப்போல் மெதுவாக சுற்றி
மீண்டும் அடுப்பில் வைத்து வெந்தது பார்த்து எடுக்க
வேண்டும்.

(இது தேங்காய்ப்பால் இல்லாமலும் சாப்பிடலாம்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~

-மீனா

பச்சை ஆப்பிள் வெல்லப்பச்சடி

பச்சை ஆப்பிள் நான்கை தோல்சீவிய பிறகு துண்டமாக
வெட்டி,பெரிய வெங்காயம் ஒன்று(சின்னவெங்காயம்
என்றால் ஐந்து)வெட்டிக்கொண்டு சிறிய ப்ரஷர்குக்கர்
அல்லது அது போன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து
எண்ணை ஒரு மேஜைக்கரண்டி ஊற்றி காய்ந்ததும்
கடுகு ஒரு தேக்கரண்டி,உளுத்தம் பருப்பு ஒரு
தேக்கரண்டி போட்டு அத்துடன் சிறிது பெருங்காயம்
காய்ந்த(வர)மிளகாய் இரண்டு,கறி வேப்பிலை சிறிது
கிள்ளிப்போட்டு,பிறகு வெட்டிவைத்துள்ள வெங்காயம்,
ஆப்பிள் இவைகளையும் அத்துடன் சேர்த்து சிறிது
நேரம் கிளறியபின் சிறிது மஞ்சள்தூள்,தனிமிளகாய்த்
தூள் இரண்டு தேக்கரண்டி, இஞ்சி விழுது ஒரு
தேக்கரண்டி தேவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு கப்
தண்ணீர் (ப்ரஷர் குக்கர் என்றால் அரை கப் தண்ணீர்)
விட்டு மூடிவைத்து(ஒரு சத்தம் போதுமானது)
ஆப்பிள் நன்கு வெந்ததும் அத்துடன் அரை கப்
(பொடித்த)வெல்லம் போட்டு சூட்டைக்குறைத்து
வைத்து வெல்லம் கரைந்து ஆப்பிளுடன் சேர்ந்து
தள தள வென்று வெந்து வந்ததும் இறக்கவேண்டும்.

பிகு:ஆப்பிளுடன் வெல்லம் சேர்ந்து வேகும்போது
எல்லா பக்கமும் சிதறும்.அதனால் அவசியம்
பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும்.

தேவைக்கேற்ப உறைப்பு இனிப்பை கூட்டிகுறைத்துக்
கொள்ளலாம்

ஏந்தினார்ப்போன்ற(pan)பாத்திரம் சரியாக வராது.
ப்ரஷர்குக்கர் என்றால் மிக சுலபம்.

இந்த பச்சடியை(பிரியாணி, தக்காளி, நெய்)சாதம்
மட்டுமல்லாது பிரட்டிலும் தடவி சாப்பிடலாம்.
உப்பு உறைப்பு புளிப்பு இனிப்பு என்று மிகவும்
சுவையாக இருக்கும்.

-மீனா

பச்சை ஆப்பிள் தொக்கு

பச்சை ஆப்பிளைத் தோல் சீவித் துருவிக் கொண்டு,
நல்லெண்ணெயில் வதக்கி, உப்பு, மிளகாய்த்தூள்,
பெருங்காயம் சேர்த்து மீண்டும் எண்ணெய் ஊற்றி
வதக்கித் தொக்கு செய்யலாம்.விருப்பம் இருந்தால்
வதக்கும் போது கொஞ்சம் போல் வெல்லம் சேர்த்து
செய்யலாம்.

-கீதா

செளசெள மோர்க்கூட்டு

செளசெள என்னும் பங்களூர் கத்திரிக்காய் மோர்க்கூட்டு

தேவையான பொருட்கள் :

காரம் தேவையான அளவு பச்சை மிளகாய்,கொஞ்சம்
சீரகம்,உப்பு,துருவிய தேங்காய்,பெருங்காயம், உளுத்தம்
பருப்பு, கருவேப்பிலை

செய்யும் வகை :

பச்சைமிளகாயையும்,சீரகத்தையும்,தேங்காயத்
துருவலையும் கொஞ்சம் உப்பு போட்டு மிக்ஸியில்
அரைத்து கொள்ளவும் அந்த விழுதை எடுத்து
வைத்துக்கொண்டு சீராக நறுக்கப்பட்ட சௌசௌ
எனப்படும் பங்களூர்க் கத்திரிக்காயை சற்றே
குறைவாக தண்ணீர் விட்டு வேகவைக்கவும்
அரைவேக்காடு போதும்

இப்போது அந்த சௌ சௌவுடன் அரைத்து
வைத்த விழுதை போட்டு நன்றாகக் கொதிக்க
விடவும் இரண்டும் கலந்து நன்றாக ஓரளவு
சௌசௌ காய்கள் தனியாக இருக்குமாறு வேக
வைத்தால் போதும் அதிகமாக வேக வைத்தால்
குழைந்துவிடும்

கொஞ்சம் கடுகு,உளுத்தம்பருப்பு பெருங்காயம்
கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து தனியே
வைத்துக்கொள்ளவும்.இப்போது அடுப்பில் இருக்கும்
சௌசௌ கொதித்துக்கொண்டிருக்கும் பாத்திரத்தை
எடுத்து கீழே இறக்கி வைத்துவிட்டு வேண்டிய அளவு
தயிரை எடுத்து அதிக நீர் சேர்க்காமல் மிக்ஸியின்
சிறிய பாத்திரத்தில் இட்டு ஒருமுறை சுழற்றினால்
கெட்டியான மோர்க்கலவை கிடைக்கும் அந்த மோர்க்
கலவையை சௌசௌ இருக்கும் பாத்திரத்தில் இட்டு
நன்றாகக் கலக்கவும்

தாளித்து வைத்திருக்கும் கடுகு,உளுத்தம்பருப்பு
பெருங்காயம் கருவேப்பிலை ஆகியவற்றைப்
போட்டு இறக்கவும். இப்போது பெங்களூர் கத்திரிக்காய்
மோர்க்கூட்டு தயார்

தமிழ்த்தேனீ

Thursday, April 1, 2010

இட்லி செய்முறை 4

புழுங்கல் அரிசி 2 கப், பச்சரிசி அரை கப், உளுந்து அரை கப்,
வெந்தயம் ஒரு மேஜைக்கரண்டி, அவல் ஒரு மேஜைக்கரண்டி.
அனைத்தையும் நன்கு களைந்து ஒன்றாக ஊற வைத்து அரைத்து
இட்லி அல்லது தோசை செய்யலாம்.

புழுங்கல் அரிசி கிடைக்காதவர்கள் பச்சரிசி 2 கப் என்றால்,
உளுந்து ஒரு கப்,மற்றவை மேற்சொன்னபடியே போட்டுச்
செய்யலாம்.மெத்,மெத்தென்ற இட்லிக்கும் சரி,தோசைக்கும்
சரி காரண்டி.

-கீதா

இட்லி செய்முறை 3

பச்சரிசி - 1 அளவு
புழுங்கலரிசி - 4 அளவு
வெந்தயம் - 1/8 அளவு

மேற்கண்டதை ஒன்றாக சேர்த்து நன்றாக அலம்பி, 8 மணி
நேரமாவது ஊற வைக்கவும்.தோலில்லாத முழு உழுந்து -
1 1/2 அளவு நன்றாக அலம்பி, தனியாக 8 மணி நேரம்
ஊற வைக்கவும்.தண்ணீர் தாராளமாக இருக்க வேண்டும்.

முதலில் உளுந்தை போட்டு நன்றாக அறைக்கவும்.
நன்றாக பொங்கி வர வேண்டும்.கொஞ்சம் கொஞ்சமாக
நீர் சேர்க்க வேண்டும்.மாவை எடுத்து விட்டு, அரிசியை
அறைக்கலாம். நிறைய தண்ணீர் விட வேண்டாம்.
கொஞ்சம் ரவையாக இருந்தாலும் நன்றாக இருக்கும்.
தேவையான உப்பைப் போட்டு ஒரு 5 நிமிடங்கள்
அறைக்கலாம். நன்றாக சேர்ந்து கொள்ளும்.

நன்றாக எல்லவற்றையும் கலந்து,குளிர்சாதன பெட்டியில்
வைக்கலாம். உபயோக்க 8-6 மணி நேரத்துக்கு முன்
வெளியில் வைக்க வேண்டும். நன்றாக பூத்து வரும்.
இட்லி வார்ப்பதற்கு முன், தேவையான தண்ணீர் விட வேண்டும்.
கரண்டியில் விட்டுப் பார்த்தால், சுலபமாக விழ வேண்டும்.
இது மிக முக்கியம். தோசையானால், தண்ணீர் இன்னம்
சேர்க்க வேண்டும்

- ஸ்வர்ணலக்ஷ்மி

இட்லி செய்முறை 2

புளுங்கல் அரிசி சேர்க்காமல் செய்வது.

இரண்டு கப் பச்சரிசி
ஒரு கப் உளுந்து
கால் தேக்கரண்டி வெந்தயம்
இரண்டு மேஜைக்கரண்டி சாதம்
உப்பு சிறிதளவு

அரிசி(வெந்தயம் சேர்த்து),உளுந்து இரண்டையும்
தனி தனியாக ஊறவைத்து,முதலில் உளுந்தை அரைத்து
எடுத்த பிறகு அரிசியுடன் வெந்தயம்,சாதம்,உப்பு சேர்த்து
(கொர கொரப்பாக)அரைத்து எல்லாவற்றையும்(நன்கு)
கலந்து 8 மணிநேரம் வைத்து பின் இட்லி அவிக்கவேண்டும்.

-மீனா

இட்லி

பூப்போன்ற இட்லி

புளுங்கல் அரிசி 800 கிராம் (4 கப்)
உளுந்து 200 கிராம் (1 கப்)
உப்பு தேவைக்கேற்ப

அரிசியையும் உளுந்தையும் நன்கு கழுவி தனி தனியாக
குறைந்தது 2 மணி நேரம் ஊறவைத்து,முதலில் உளுந்தை
சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு மசிய அரைத்து எடுத்துக்
கொண்டு பிறகு அரிசியை உப்பு சேர்த்து சிறிது கொரகொரப்பாக
அரைத்து உளுந்துமாவுடன் சேர்த்து ரொம்ப தண்ணியாகவும்
இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் சரியான பக்குவத்தில்
கரைத்து 6 ல் இருந்து 8 மணி நேரம் புளிக்க வைத்து
பிறகு இட்லி அவிக்கலாம்.

குறிப்புகள்:

நல்ல உளுந்தாக இருந்தால் 4 கப் அரிசிக்கு ¾ கப் சேர்த்தால் போதும்.

அரிசி பருப்பை முதல் நாள் இரவு முழுதும் ஊற வைத்து
காலையில் அரைக்கலாம்.

அரிசி, பருப்பை ஊறவைக்கும் போது நன்கு கழுவி விடுவதால்
அரைப்பதற்கு முன் லேசாக அலசினால் போதுமானது.அதிகமாக
கழுவும்போது மாவு பொங்கி(புளித்து)வருவது தடுக்கப்படுவதோடு
சத்துக்களும் போய்விடும்.

இரண்டு மேஜைக்கரண்டி வெந்தயத்தை எண்ணை விடாமல்
லேசாக வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கி
வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது இட்லிமாவில்
சிறிது வெந்தயப்பொடியை கலந்து தோசை சுடலாம் ருசியுடன்
வாசனையாகவும் இருக்கும்.

பொதுவாக இட்லி வேகும் நேரம் குக்கர் தட்டாயிருந்தாலும்,
ஏழு குழி,ஐந்து குழி,அல்லது இரண்டடுக்கு தட்டாயிருந்தாலும்
ஏழு நிமிடம் போதுமானது நன்கு அவிந்து விடும்.

அதிக நேரம் அவிக்கப்படும்போது இட்லியின் நிறம் மாறக்கூடும்.

-மீனா