Tuesday, April 20, 2010

சைவ நாசிலெமாக்

 
                              (இது அசைவம்!)

தேவையனவை:

பச்சரிசி 1 கப்(200கிராம்)
தேங்காய் 1 மூடி
உப்பு தேவைக்கேற்ப
உருளைகிழங்கு 2 (சிறியதாக)
நிலக்கடலை 50 கிராம்
எண்ணை ½ கப் (பொரிப்பதற்கு)
லவங்கம் ½ பூ
பண்டான் 2 இலை
எலுமிச்சம்பழம் ½ மூடி
இஞ்சி துண்டு ¼ இஞ்ச்
வெள்ளரிக்காய் 1
சைவ நெத்திலி 200 கிராம்}
அல்லது வாழைப்பூ 1
(மேலாக உள்ள மூன்று அடுக்கு)
பெரிய வெங்காயம் 1
தனி மிளகாய்த்தூள் 1½ தேக்கரண்டி
புளி நெல்லிக்காய் அளவு


செய்முறை:

தேங்காயைத் துருவி (2¼ கப் தண்ணீர் விட்டு பால்
எடுக்க வேண்டும். அரிசியை கழுவி தேங்காய்ப்பாலை
அத்துடன் சேர்த்து,இஞ்சி அரைத்தது, பண்டான் இலை,
லவங்க பூ, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பில்
(பிரஷர் குக்கரானால் 12 நிமிடம்) வைத்து கொதி
வந்ததும் அடுப்பை நன்கு குறைத்து இளம் சூட்டில்
வேக வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

கடலையை எண்ணையில் வறுத்து எடுத்துக்கொண்டு,
வாழைப் பூவையும்(உள்ளிருக்கும் நரம்பை நீக்கி)
எண்ணையில் பொரித்து எடுத்து சிறிய உருளைக்
கிழங்கை சிறிது உப்பு சேர்த்து அவித்து தோலை
உரித்து இரண்டாக வெட்டி வைத்து கொண்டு,
வெள்ளரிக்காயை தோல் சீவி கழுவி அதன் மேல்
பாகத்தின் முழுதும் நீட்டவாக்கில் முள் கரண்டியால்
கீறிவிட்டு பிறகு வட்டமாக மெலிதாக வெட்டி
வைத்துக்கொள்ள வேண்டும்.

சம்பல் செய்முறை :

அடுப்பில் தட்டையான ஒரு பாத்திரத்தை வைத்து
சிறிது எண்ணை விட்டு அதில் பொரித்த வாழைப்பூ,
வெட்டி வைத்துள்ள வெங்காயம், சேர்த்து 1 நிமிடம்
கிளறி பின் அதனுடன் மிளகாய்த்தூள் சேர்த்து புளியை
1/4கப் தண்ணீரீல் கரைத்து தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து
மூடி சிறிது நேரம் வேகவிட்டு எண்ணை மிதந்ததும்
இறக்கி வைத்துக்கொள்ள வெண்டும்.

ஏற்கனவே சமைத்துவைத்துள்ள சாதத்தை(தேங்காய்
மூடிபோன்ற) குழியான சின்ன கிண்ணத்தில் எடுத்து
கரண்டியால் சம மாக அமுக்கி சாப்பாடு பரிமாறும்
தட்டின் நடுவில் குப்புறகொட்டினால் அழகாக விழும்.
அதை சுற்றிலும் உருளைகிழங்கு,பொரித்த கடலையில்
பாதி,வட்டமாக வெட்டிவைத்திருக்கும் வெள்ளரிக்காய்
ஐந்து, காளான்சம்பல் ஒரு கரண்டி, எலுமிச்சை
எல்லாவற்றையும் வைத்து பரிமாறவேண்டும்.

சாப்பிடும் போது எலுமிச்சையை பிழிந்து விட்டு
மற்ற எல்லாவற்றிலும் கொஞ்சம்கொஞ்சம் எடுத்து
சாதத்துடன் சேர்த்து சாப்பிடவேண்டும்.

 குறிப்பு:

பண்டான் என்பது ஒரு இலை அது மலேசியாவில்
கிடைக்கும். மற்ற நாட்டில் கிடைக்குமா என்பது
தெரியவில்லை பண்டான் இலை இல்லையென்றால்
பதிலுக்கு கொத்தமல்லி உபயோகிக்கலாம்.அதே
போல் மலேசியாவில் சைவ நெத்திலி(அயிரை)
மீன் கிடைக்கும். சைவ நெத்திலியோ,வாழைப்
பூவோ கிடைக்கவில்லையென்றால் பதிலுக்கு
காளானை எண்ணையில் பொரித்தும் உபயோகிக்
கலாம்.அல்லது கொத்தவரங்காயை இரண்டு
பக்கமும் நுனியில் வெட்டி முழுதாக சிறிது
உப்பு போட்டுபிசறி எண்ணையில் வறுத்து
சாதத்துடன் சாப்பிடலாம். அதையே சம்பலும்
செய்யலாம்.கொத்தவரங்காய் நல்ல பிஞ்சாக
இருக்க வேண்டும்.

எலுமிச்சை பிடிக்காதவர்கள் அது இல்லாமலேயே
சாப்பிடலாம்.

சம்பல் செய்யும்போது எண்ணை கொஞ்சம் அதிகம்
இருந்தால்த்தான் நாசிலெமாக் சுவையாக இருக்கும்.

முட்டை மட்டும் சாப்பிடுபவர்கள்.உருளை
கிழங்குக்கு பதில் முட்டையை சேர்த்துக்
கொள்ளலாம்.

-மீனா

No comments:

Post a Comment