Thursday, April 8, 2010

கூட்டு

காய்கள்: முட்டைக்கோஸ், செளசெள என்னும் பங்களூர் கத்திரிக்காய், அவரைக்காய், புடலங்காய், கத்திரிக்காய், கொத்தவரைக்காய், பீன்ஸ், வெள்ளைப் பூசணிக்காய், பறங்கிக்காய்.

பருப்புச் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ செய்யலாம். ஆனால் பருப்புச் சேர்க்காமல் கொத்தவரை, பீன்ஸ், அவரையில் மட்டும் நன்றாயிருக்கும். முதலில் அவை.

மேலே சொன்ன மூன்று காய்களில் ஏதேனும் ஒன்று கால் கிலோ. கடலைப்பருப்பு ஒரு தேக்கரண்டி. மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, உப்பு தேவையான அளவு, பெருங்காயம் கட்டி அல்லது தூள், தேங்காய்(விருப்பமிருந்தால்) அரிசி மாவு ஒரு தேக்கரண்டி. கருகப்பிலை, கொத்துமல்லி, தாளிக்க ஒரு தேக்கரண்டி எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, ஒரு மி.வத்தல்.

கடலைப்பருப்பைச் சிறிது நேரம் ஊற வைத்துவிட்டு, ஒரு கடாய் அல்லது காப்பர் பாட்டம் பாத்திரத்தில் அல்லது உருளியில் போட்டு நீர் சேர்த்து வேக வைக்கவும். நறுக்கி வைத்த காயை, ஒரு முட்டை நல்லெண்ணெய் விட்டு சிறிது நேரம் வதக்கிவிட்டுப்(நிறம் மாறாமல் இருக்கும்) பின்னர் கடலைப்பருப்போடு சேர்த்து வேகவைக்கவேண்டும். அரை வேக்காட்டில் மஞ்சள் பொடி, பெருங்காயம் கட்டியானால், (தூள் என்றால் தாளிக்கும்போது போடலாம்.), சாம்பார் தூள் சேர்க்கவும். வேகும்போது உப்புச் சேர்க்கவும். முன்னாலேயே உப்பைச் சேர்த்தால் சில சமயம் காய்கள் விறைப்புத் தன்மை அடையும். நன்கு வெந்து சேர்ந்து கொதிக்கும்போது, கொஞ்சம் தேங்காய்துருவலோடு அரிசி மாவைச் சேர்த்து அரைத்துக் கூட்டில் கொட்டிக் கலக்கவும். தேங்காய் சேர்க்கவில்லை எனில் ஒரு தேக்கரண்டி புழுங்கலரிசியை நன்கு வறுத்துக் கொண்டு மாவாக்கி அந்த மாவைப் போடலாம். வாசனையாகவும் இருக்கும். தேங்காய் சேர்க்காத குறையும் இருக்காது. சர்க்கரை நோயாளிகளுக்கு இப்படித் தான் செய்வது வழக்கம். கீழே இறக்கிக் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துப் பின் கருகப்பிலை, கொத்துமல்லி போடவும்.

இதே போல் முட்டைக்கோஸ், செளசெள போன்ற காய்களிலும் செய்யலாம் என்றாலும் அவற்றுக்குக் கட்டாயம் தேங்காய் வேண்டும். உப்புச் சேர்க்கும்போது ஒரு தக்காளியை நாலாய்க் கீறிப் போடலாம். இது சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆகவும் பயனாகும்.(பிடிக்கிறவங்களுக்கு)

பருப்புச் சேர்த்துச் செய்யும் விதம்.
இதற்குப் பயத்தம்பருப்புத் தான் நன்றாக இருக்கும். தேங்காய் கட்டாயம் தேவை. கால் கிலோ காய்கறி என்றால் சின்னதாய் ஒரு மூடித் தேங்காய் அல்லது இரண்டு மேஜைக்கரண்டி துருவல், மிளகாய் வற்றல் ஒன்று அல்லது இரண்டு, சீரகம், அரிசி மாவு. கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை, தாளிக்க எண்ணெய்.

பயத்தம்பருப்பு ஒரு மேஜைக்கரண்டி, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு. இரண்டையும் களைந்து ஊற வைத்து வேக வைக்கவும். பயத்தம்பருப்பு நன்கு குழைய ஆரம்பிக்கும்போது நறுக்கி வைத்த காய்கள் சேர்க்கவேண்டும். எல்லாக்காய்களும் சேர்த்தும் பண்ணலாம். அல்லது தனியாக முட்டைக்கோஸோ, செளசெளவோ, அவரைக்காயோ, புடலையோ பண்ணலாம். காய்களைச் சேர்த்ததும் மஞ்சள் பொடியும், உப்பும் மட்டும் போடவும். நன்கு வெந்து வந்ததும் மிளகாய் வற்றல், தேங்காய் துருவல், சீரகம், அரிசிமாவை ஒன்றாய் அரைத்துக் கூட்டில் கொட்டிக் கலக்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கிவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மி.வற்றல்(தேவையானால்) தாளித்துக் கருகப்பிலை போடவும். இதுவும் சாதத்தோடு சேர்த்துச் சாப்பிடவும், சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.

பொடி போட்டுச் செய்யும் முறை:

பயத்தம்பருப்பு வேக வைத்துக் கொண்டு, காய்களைப் போட்டுவிட்டு, மஞ்சள் தூள், சாம்பார்பொடி, உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். காய்கள் நன்கு வெந்ததும் தேங்காய் துருவலையும் அரிசி மாவையும் அரைத்துச் சேர்க்கவும். அல்லது மாவை மட்டும் கரைத்துவிட்டுத் தாளிக்கும் போது கடுகு, உளுத்தம்பருப்பு, வறுத்துக் கொண்டு அந்த எண்ணெயிலேயே கருகப்பிலையும், தேங்காயையும் வறுத்துச் சேர்க்கலாம்.

-கீதா

1 comment:

  1. வாங்க கீதா :) எனக்கு ரொம்ப சுலபமா இருக்கே!

    ReplyDelete